2549.எரியின் வார் கணை இராமன் விட,
     எங்கும் நிலையாது
உருவி ஓட மறம் ஓடுதல்
     செயா உணர்வினான்,
அருவி பாயும் வரைபோல் குருதி
     ஆறு பெருகிச்
சொரிய, வேக வலி கெட்டு,
     உணர்வு சோர்வுறுதலும்

    இராமன் எரியின் வார்கணை விட - இராமபிரான் நெருப்புப்
போன்ற நீண்ட அம்புகளை எய்ய; எங்கும் நிலையாது உருவி ஓட -
எவ்விடத்தும் தடைப்படாமல் அரக்கன் உடலில் அவ்வம்புகள் ஊடுருவிச்
செல்ல; மறம் ஓடுதல்செயா உணர்வினான் - கொடுமை நீங்கா
அறிவுடைய அவ்வரக்கன்; அருவி பாயும் வரை போல்- அருவிகள்
பாய்ந்து ஓடும் மலை போல; குருதி ஆறு பெருகிச் சொரிய - இரத்த
ஆறுபோலத் தன் உடம்பிலிருந்து பெருக்கெடுத்து வழிய; வேக வலி
கெட்டு உணர்வு சோர்வுறுதலும் -
மிகுந்த வலிமை அழிந்து அறிவிழந்த
அளவில்.

     எரியின் வார்கணை அக்கினி யாத்திரமும் ஆகும். எரிக்க வேண்டிய
அவ்வம்பு விராதனின் வரவலிமையால் அவனை எரிக்காமல் ஊடுருவியது
என்பர். விராதனுக்கு மலையும் அவன் உடலிலிருந்துபெருகும் இரத்தத்திற்கு
அருவியும் முறையே உவமையாம். குருதி ஆறு - உருவகம்.            33