இராமலக்குவர் விராதன் தோள்மேல் ஏறி வெட்டி வீழ்த்தல்

2550.மெய் வரத்தினன், ‘மிடல்-
     படை விடப் படுகிலன்;
செய்யும் மற்றும் இகல்’ என்று
     சின வாள் உருவி, ‘வன்
கை துணித்தும்’ என, முந்து கடுகி,
     படர் புயத்து,
எய்வு இல் மல் பொருவு தோள் இருவர்
     ஏற, நிருதன்

    எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் - சோர்வில்லாத, மற்போர்
செய்வதில் வல்ல தோள்களை உடைய இராமலக்குவர்; மெய்வரத்தினன் -
அழியாவரம் பெற்ற விராதன்; மிடல் படை விடப் படுகிலன் - வலிய
அம்புகளை எய்தும் இறவான்; மற்றும் இகல் செய்யும் - மேலும் இவன்
போர்புரிவான்; என்று சினவாள் உருவி - எனக்கருதிக் கோபத்தோடு
வாள்களை உருவி; வன்கை துணித்தும் என - (அரக்கனின்) வலிய
கைகளை வெட்டி வீழ்த்துவோம் என்று; முந்து கடுகி படர் புயத்து ஏற -
அவன் முன் விரைந்துசென்று அவனுடைய பரந்த தோள்களின் மீது ஏற;
நிருதன் - அரக்கனாம் அவ் விராதன்.

     வரம் பெற்ற விராதன் இறவாததால் இராமலக்குவர் வாளால் அவன்
தோளை வெட்ட அவன் மீதுஏறினர். இருவர் கோபத்தை வாளின் மீது
ஏற்றிக் கூறப்பட்டது என்பர். சினம் - போர் எனவும்கூறுவர். எய்வில்
என்பதற்கு அம்புகளை எய்யும் வில்லுடைய என்றுமாம்.               34