2552.முந்து வான் முகடு உறக் கடிது
     முட்டி முடுகிச்
சிந்து சோரியொடு சாரிகை
     திரிந்தனன் அரோ-
வந்து மேருவினை நாள்தொறும்
     வலம்செய்து உழல்வோர்,
இந்து சூரியரை ஒத்து,
     இருவரும் பொலியவே.

    மேருவினை நாள் தொறும் வலம் செய்து வந்து உழல்வோர்
இந்து சூரியரை ஒத்து -
மேருமலையைத் தினமும் வலமாகச் சுற்றித்
திரிபவர்களாம் சந்திர சூரியர்களைப் போன்று; இருவரும் பொலிய -
இராமலக்குவர் அவன் தோள்கள் மீது விளங்க; முந்து வான் முகடு உற -
மேல் உள்ள வானத்தின் உச்சியைப் பொருந்த; கடிது முட்டி - வேகமாக
முட்டிக்கொண்டு; சிந்து சோரியொடு - வழியும் இரத்தத்தோடு; முடுகிச்
சாரிகை திரிந்தனன்-
(விராதன்) வேகமாக வட்ட மிட்டுச் சுற்றினான்.
அரோ - அசை; ஏ - ஈற்றசை.

     மேருமலை அரக்கனுக்கும், சந்திர சூரியர் இராமலக்குவர்க்கும் உவமை.
சந்திர சூரியர்மேருவை வலமாகச் சுற்றுதல் என்பது புராண மரபு. முந்து
வான் என்பதை மற்றப் பூதங்களுக்கு முன்வைத்துஎண்ணப் பெறும் வானம்
என்றுமாம்.                                                   36