2554. | மா தயா உடைய தன் கணவன், வஞ்சன் வலியின் போதலோடும் அலமந் தனள்; புலர்ந்து, பொடியில், கோதையோடும் ஓசி கொம்பு என, விழுந்தனள் குலச் சீதை, சேவல் பிடியுண்ட சிறை அன்னம் அனையாள். |
குலச்சீதை - உயர்குலத்துதித்த சீதை; மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வலியின் போதலோடும் - பெருங்கருணை பூண்ட தன் துணைவனாம் இராமன் வஞ்சம் செய்த விராதனின் வலிமைக்குட்பட்டுத் தூக்கிச் செல்லும்போது; அலமந்தனள் - வாடிக் கலங்கினாள்; புலர்ந்து சேவல்பிடியுண்ட சிறை அன்னம் அனையாள் - வாட்டமடைந்து ஆணன்னம் பிறரால் பிடிபட மென் சிறகுள்ளபெண் அன்னம் போன்றவளாய்; பொடியில் கோதையோடும் ஓசி கொம்பு என விழுந்தனள் - புழுதியில் கூந்தலொடு துவளும் பூங்கொம்பு போல விழுந்தாள். தன் கூந்தல் புழுதியில் புரளப் பூங்கொம்பு போல் சீதை விழுந்தாள். குலம் - நிமிகுலம்.சனகன் யாகசாலை அமைக்க நிலத்தை உழுதபோது உழுபடைச் சாலில் கிடைத்ததால் சீதைஎனப்பட்டாள். சேவல் - ஆண் அன்னம், கோதை - கூந்தல். கோதையோடும் ஓசிகொம்பு -காற்றினால் அசையும் பூங் கொம்பு எனவும் கொள்வர். 38 |