2555. பின்னை ஏதும் உதவும் துணை பெறாள்;
     உரை பெறாள்;
மின்னை ஏய் இடை நுடங்கிட
     விரைந்து தொடர்வாள்;
‘அன்னையே அனைய அன்பின்
     அறவோர்கள்தமை விட்டு
என்னையே நுகர்தி’ என்றனள்-
     எழுந்து விழுவாள்.

    எழுந்து - மீண்டும் (சீதை) எழுந்து; உதவும் துணை பின்னை ஏதும்
பெறாள் -
தனக்கு உதவிடும் துணைவேறு ஒன்றும் பெறாதவளும்;
உரைபெறாள் - ஆறுதல் கூறும் மொழி ஒன்றும் பெறாதவளும் ஆகி;
மின்னைஏய் இடை நுடங்கிட விரைந்து தொடர்வாள் - மின்னலைப்
போன்ற இடை துவண்டிடவேகமாய் விராதனைத் தொடர்ந்தவள்;
அன்னையே அனைய அன்பின் அறவோர்கள் தமைவிட்டு -தாய்
போன்று பிறரிடம் அன்பு காட்டும் அறவோராம் இராமலக்குவரை விட்டு
விட்டு; என்னையே நுகர்தி என்றனள் - என்னை நீ கொண்டு போய்
உண்ணுக என்று கூறினளாய்; விழுவாள் - (அவன்முன்) மீண்டும் விழுவாள்.

     இராமலக்குவர் அறவோர் ஆதலால் அவர்களால் உலகம் நலம் பெறும்
என்பதால் அவர்களைவிட்டு விட்டுத் தன்னை உண்ணுமாறு கேட்கிறாள்
சீதை. மின்னலின் ஒளியும். தனக்கெனத் தனிஉருவின்மையும் சீதை இடைக்கு
உவமையாகக் காரணமாயின. உரை பெறாள் என்பதால் காட்டில் சீதைதனித்த
அபலையாய் உள்ள அவல நிலை புலப்படும்.                        39