2556. | அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து இளையவன் தொழுது ‘தேவி துயர் கூர விளையாடல் தொழிலோ? பழுது வாழி’ என ஊழி முதல்வன் பகர்வுறும்: |
வாய் குழறி அழுது - வாய்ச் சொற்கள் குழறி அழுது, ஆர்உயிர் அழுங்கி - அரிய உயிர் வருந்தி; அலையா -அலைந்து, எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து - ஓவியத்தில் எழுதும் பதுமை போன்ற சீதையின் துன்பநிலையை அறிந்து; இளையவன் - இலக்குவன்; தொழுது - இராமனைவணங்கி; வாழி - நீர் வாழ்க; தேவி துயர்கூர - சீதை இவ்வாறு பெருந்துயரில்வருந்த; விளையாடல் தொழிலோ - விளையாட்டாக எண்ணி இருப்பது நன்றோ? பழுது - இது குற்றம்; என - என்று கூற; ஊழி முதல்வன் பகர்வுறும் - பல உலகத்தைத்தோற்றுவித்தவனாகிய இராமன் கூறத் தொடங்குவான். சீதையின் அவல நிலை கண்டு இலக்குவன் இராமனிடம் ‘இவ்வாறு விளையாடலாமா?’ எனக்கூறினான். எழுது பாவை - அசையாது இருத்தலுக்கு உவமை. எனவே சீதை மூர்ச்சித்து விழுந்தாள்என்பர். பெரியோரிடம் பேசுமுன் கூறும் மரியாதை மொழி ‘வாழி’ என்பதாம். இனிப்பழுது எனக் கூறியமையைப் பொறுத்துக் கொள்ளுமாறு ‘வாழி’ என்று கூறினான் எனலுமாம். ஊழி முதல்வன் என்பதால்இராமனின் முதன்மை நிலை புலப்படும். 40 |