2557. | ‘ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி, இனிதின் போகல் நன்று என நினைந்தனென்; இவன், பொரு இலோய்! சாகல் இன்று பொருள் அன்று, என நகும் தகைமையோன், வேக வெங் கழலின் உந்தலும், விராதன் விழவே, |
பொரு இலோய் - ஒப்பில்லாதவனே! ஏகநின்ற நெறி எல்லை கடிது ஏறி - இக்காட்டில் செல்ல வேண்டிய வழியின் முடிவை விரைவில் இவன்மீது ஏறி, இனிதின் போகல்நன்று என நினைந்தனென் - இனிதாகச் செல்லுதல் நல்லது என்று எண்ணினேன்; இவன் சாகல்இன்று பொருள் அன்று - (விராதனாம்) இவன் இறப்பது இன்று நமக்கு அரிய செயல் அன்று, எனநகும் தகைமையோன் - என எள்ளல் குறிப்போடு கூறிய இராமன்; விராதன் விழ - அவ்வரக்கன் கீழே விழ; வேக வெங்கழலின் உந்தலும்- வேகமாகத் தன் வலிய வீரக்கழல் அணிந்த திருவடியால் உதைக்கவும் ஏ - ஈற்றசை. ‘நாம் செல்லக் கருதிய வழியாகஇவ்வரக்கன் செல்வதால் வருத்தமின்றி இனிது நடக்கக் கருதினேன். இவனைக் கொல்வது அரிதன்று’என எள்ளற் சிரிப்புடன் இராமன் கூறியது முன் செய்யுளில் இலக்குவன் ‘தேவிதுயர்கூர விளையாடல்தொழிலோ’ என்ற கேள்விக்குரிய விடையாய் உளது. வெங்கழல் - அடியார் விரும்பும் திருவடிஎனலாம். சாகல் - சாதல் பொருவிலோய் எனக் கொண்டு போர் செய்யும் வில்லை உடையோய் எனவும் கொள்வர். 41 |