விராதனைப் புதைக்க அவன் சாபம் நீங்கி விண்ணில் தோன்றல் 2558. | தோள் இரண்டும் வடி வாள்கொடு துணித்து, விசையால் மீளி மொய்ம்பினர் குதித்தலும், வெகுண்டு, புருவத் தேள் இரண்டும் நெரிய, சினவு செங் கண் அரவக் கோள் இரண்டு சுடரும் தொடர்வதின் குறுகலும் |
மீளி மொய்ம்பினர் - வலிய தோளுடைய இராமலக்குவர்; விசையால் வெகுண்டு வடிவாள் கொடு தோள் இரண்டும் துணித்து -வேகத்தோடு சினந்து தம் வடித்த கூரிய வாளைக் கொண்டு அரக்கனின் இரு தோள்களையும்வெட்டி; குதித்தலும் - கீழே தாவிக் குதித்தலும்; புருவத் தேள் இரண்டும் நெரிய -(விராதனின்) புருவமாகிய தேள் இரண்டும் நெரியும்படி சினந்து; சினவு செங்கண்அரவக்கோள் - கோபத்தால் சிவந்த கண்களை உடைய இராகு எனும் கிரகம்; இரண்டு சுடரும்தொடர்வதின் குறுகலும் - சந்திரன் சூரியன் எனும் இரண்டு சுடர்களையும் பற்றத் தொடர்வதுபோல நெருங்கி வரலும், மீளி மொய்ம்பினர் - கூற்றுவன் போலவலிமையுடையவர் எனலுமாம். கொடுக்கும், அடர்ந்த பலகாலும் கொண்ட தேளைப் புருவமாக உருவகம் செய்யப் பெற்றுள்ளது, விராதன் இராகு போல இராமலக்குவர் எனும் இரு சுடர்களைப் பற்ற வரும்உவமை புராண மரபில் புனையப்பட்டுள்ளது. இது இல்பொருளுவமை. 42 |