2559.புண்ணிடைப் பொழி உயிர்ப் புனல்
     பொலிந்து வரவும்,
விண்ணிடைப் படர்தல் விட்டு, எழு
     விகற்பம் நினையா,
எண்ணுடைக் குரிசில் எண்ணி,
     ‘இளையோய்! இவனை, இம்
மண்ணிடைக் கடிது பொத்துதல்
     வழக்கு’ எனலுமே

    புண்ணிடைப் பொழி உயிர்ப் புனல் பொலிந்து வரவும் - உடலிற்
பட்ட புண்களிலிருந்து பெருகிய இரத்த வெள்ளம் விளங்கி ஓடவும்;
விண்ணிடைப்படர்தல் விட்டு - வானில் செல்வதைத் தவிர்த்து; எழு
விகற்பம் நினையா -
அவன்எழுந்து செல்லும் மாறுபாட்டை நினைத்து;
எண்ணுடைக் குரிசில் எண்ணி - எண்ணத்தில்சிறந்த இராமன் உணர்ந்து;
இளையோய்! - தம்பி!; இவனை இம் மண்ணிடைக் கடிதுபொத்துதல்
வழக்கு -
இவ்வரக்கனை இந்த நிலத்தில் விரைவாக மூடுதல் வழக்கு;
எனலுமே -என்ற அளவில்; ஏ - ஈற்றசை.

     உயிர்ப்புனல் உயிர் இருப்பதற்காக உடலில் ஓடும் இரத்தம். விராதன்
படைகளால்இறவாததால் மண்ணில் புதைத்தலை இராமன் கூறினான்.
குரிசில் - பெருமையிற் சிறந்தவன்,ஆண்பால் சிறப்புப் பெயர்.         43