2560. | மத நல் யானை அனையான் நிலம் வகிர்ந்த குழிவாய் நதம் உலாவு நளி நீர்வயின் அழுந்த, நவை தீர் அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று உதவு சேவடியினால், அமலன் உந்துதலுமே |
நவை தீர் அதவம் ஆய் நறுநெய் உண்டு - குற்றமற்ற அத்திக்கட்டையால் செய்த அகப்பை கொண்டு பெய்த நறு மண நெய்யை உண்டு; உலகில்அன்பர் கருதிற்று உதவு சேவடியினால் - உலகத்தில் அடியவர் நினைத்தவற்றை அருளும் சிவந்ததன் திருப்பாதத்தால்; அமலன் - தூயவனான இராமன்; உந்துதலும் - உதைத்துத்தள்ளவும்; நல்மத யானை அனையான் - சிறந்த மதம் கொண்ட யானை போன்ற இலக்குவன்; நளிநீர் உலாவு நதம்வயின் - மிகுந்த நீர் பாயும் மேற்கு நோக்கி ஓடும் ஆற்றின்அருகில்; நிலம் வகிர்ந்த குழிவாய் - மண்ணில் தோண்டிய குழியில்; அழுந்த - பதிய; ஏ - ஈற்றசை. மதநல்யானை அனையான் என்ற தொடர் விராதனைக் குறிக்கிறது என்பர் சிலர். யாகத்தீ தூயதுஎன்பதை இங்கு உணரத்தக்கது. ஆழமாகக் குழி தோண்டியதால் ஊறிய நீர்க்கு யாகத்தில் பெய்யும்நெய்யாகக் கொள்ளலாம். அதவு - அதவம், அத்தி (செய்த அகப்பை) அ+மலன் - குற்றமற்றவன். ‘அதவத்தனன் என்பது சங்கம். 44 |