2561. | பட்ட தன்மையும் உணர்ந்து படர் சாபம் இட முன் கட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான் விட்டு விண்ணிடை விளங்கினன்- விரிஞ்சன் என ஓர் முட்டை தந்ததனில் வந்த முதல் முன்னவனினே |
பட்ட தன்மையும் உணர்ந்து - அங்ஙனம் தான் மண்ணில் புதைக்கப் பட்ட தன்மையை அறிந்து; முன்படர் சாபம் இட - முன்(குபேரனால்) பற்றிய சாபம் இட்டதால்; கட்ட வன் பிறவி தந்த - கொடிய அரக்கப் பிறவி கொடுத்த; கடைஆன உடல்தான் விட்டு - கீழான இழிந்த உடம்பை நீக்கி; ஓர்முட்டை தந்து - இரண்யகருப்பம் எனும் முட்டையை உண்டாக்கி; அதனில் வந்த விரிஞ்சன்என முன்னவனின் - அதிலிருந்து தோன்றிய பிரமன் எனும் முதல்வன்போல்; விண்ணிடைவிளங்கினன் - (விராதன் தன் முன்னைய கந்தருவ உருவில்) வானில் தோன்றினான். ஏ -ஈற்றசை. அண்டத்தில் பிரமன் தோன்றியது போல வானில் விராதன் தோன்றினான். சாபம்பெற்றதைக் ‘கரக்க வந்த’ (2580) என்ற இப்படலப் பாடல் பின்னர்க் கூறும். விரிஞ்சன் -அன்னப்பறவையால் தாங்கப் பெறுபவனாம் பிரமன். பட்ட தன்மை உணர்தல் என்பது முன் பிறவிஞானம் பெறல். பிறவித் துன்பம் தன்னைப் பற்றியும், பிற உயிர் பற்றியும் தெய்வத்தைப்பற்றியும் வருவன. 45 |