2562. | பொறியின் ஒன்றி, அயல்சென்று திரி புந்தி உணரா, நெறியின் ஒன்றி நிலை நின்ற நினைவு உண்டதனினும், பிறிவு இல் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும், அறிவு வந்து உதவ, நம்பனை அறிந்து, பகர்வான். |
பொறியின் ஒன்றி - ஐம் பொறிகளின் வயத்தில் சிக்கி; அயல் சென்று திரி - புறத்தே உள்ளபொருளுணர்வில் ஈடுபட்டு அலைய; புந்தி உணரா - புத்தியால் அறிய முடியாத; நெறியின் ஒன்றி - நல்வழியில் ஈடுபட்டு; நிலைநின்றநினைவு உண்டதனினும் - நிலைபெற்று நின்ற எண்ணம் உண்டானதாலும், பிறிவுஇல் அன்பு -பிரிதல் இல்லாத பக்தி; பண்டு நனி உடைய பெற்றி தனினும் - முன் மிகக்கொண்டிருந்த தன்மையாலும்; அறிவு வந்துதவ - உண்மை ஞானம் வந்து துணை செய்வதாய்த்தூண்ட; நம்பனை அறிந்து பகர்வான் - தலைவனாம் இராமனை (ப்பரம் பொருள் என) உணர்ந்துதுதி செய்வான். ஐந்து பொறிகளில் சிக்குண்ணாமல் புத்திநிலை பெற்று நல் வழிப்பட்டு முன்வினை துணைசெய்ய இறையருள் கூடியது. இராமன் திருவடி தீண்டப் பெற்றதால் விராதனைப் பற்றிய தீவினைகள்நீங்கின. பழவினை நீங்க ஞானம் கைகூட இராமனைப் பரம்பொருள் என உணர்ந்து துதிப்பானாயினான். பொறிகள் மெய் வாய் கண் மூக்கு செவி என ஐந்தாம். பிறிவு - பிரிவு, செய்யுள்விகாரம். 46 |