விராதன் இராமனைத் துதித்தல்

2563.வேதங்கள் அறைகின்ற உலகு
     எங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னின்,
     படிவங்கள் எப்படியோ?
ஓதம் கொள் கடல் அன்றி, ஒன்றினோடு
     ஒன்று ஒவ்வாப்
பூதங்கள்தொறும் உறைந்தால், அவை
     உன்னைப் பொறுக்குமோ?

    வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன் பாதங்கள்-
வேதங்கள் சொல்கின்ற எல்லா உலகங்களிலும் பரந்துள்ளன உன்னுடைய
திருவடிகள்; இவை என்னின்படிவங்கள் எப்படியோ - இவைதாம்
என்றால் உன் திருவடியின் மற்ற உறுப்புக்கள் எவ்வாறு
அமைந்துள்ளனவோ?; ஓதம் கொள் கடல் அன்றி - நீர் கொண்ட கடல்
அல்லாமல்; ஒன்றினொடு ஒன்று ஒவ்வாப் பூதங்கள் தொறும்
உறைந்தால் -
ஒன்றுக் கொன்று முரணாக உள்ளமற்ற பூதங்களில் நீ
தங்கியிருந்தால்; அவை உன்னைப் பொறுக்குமோ - அப்பூதங்கள்
உன்னைத் தாங்கும் வலிமையுடையன ஆகுமோ? (ஆகா).

     ‘வேதங்கள் ஒலிக்கின்ற’ ‘வேதங்கள் துதிக்கின்ற’ எனவும் கூறுவர்.
திருவடி உலகெங்கும்பரந்தது திரிவிக்கிரமனாக வாமனாவதாரத்தில்
கண்டதாம். ஓதம் - குளிர், ஒலி எனவுமாம்ஐம்பூதங்களாவன, நிலம், நீர்,
காற்று, தீ, ஆகாயம், பூதங்கள், வன்மை மென்மை, தட்பம்வெட்பம், உரு
அரு எனப் பல்வேறு முரண்பாடு கொண்டவை. ‘படிவங்க’ளில் கள் என்பதை
அசையாக்கிவடிவம் எனவும் கூறுவர். எப்படியோ - ஐயப்பொருளில் வந்த
ஓகாரம். பொறுக்குமோ - எதிர் மறைப்பொருளில் வந்த ஓகாரம். விராதன்
துதிபோல் இந்நூலில் இந்திரன், கவந்தன் பிரமன் துதிகளும்ஒப்பு
நோக்கற்குரியன.                                               47