2564. | ‘கடுத்த கராம் கதுவ நிமிர் கை எடுத்து மெய்கலங்கி உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள உறு துயரால் "அடுத்த பெருந் தனி மூலத்து அரும் பரமே! பரமே!" என்று எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று "ஏன்?" என்றாய்? |
கடுத்த கராம் கதுவ - கோபித்த முதலை (தன் காலைப்) பற்றிக் கொள்ள; ஒருவாரணம் உறுதுயரால் நிமிர்கை எடுத்து -கசேந்திரன் என்னும் ஒரு யானை தனக்கு ஏற்பட்ட மிக்க துன்பத்தால் துதிக்கையை மேலேதூக்கி எடுத்துக் கொண்டு; மெய்கலங்கி உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள - உடல் தளர்ந்து சூழ்ந்த திக்குகளில் எல்லாம் தான் பிளிரும் ஒலி சென்றடைய; அடுத்த பெரும்தனி மூலத்து அரும்பரமே! பரமே! - எல்லாப் பொருள்களிலும் சென்று தங்கும் பெருமைமிக்க மூலப் பொருளான அரிய பரம் பொருளே! பரம் பொருளே!; என்று எடுத்து அழைப்ப - என்றுகுரலெடுத்துக் கூப்பிட; நீயோ அன்று "ஏன்" என்றாய் - நீ தானே அன்று "ஏன்" எனக்கேட்டு அதன் பக்கம் சென்று துயர் நீக்கிக் காப்பாற்றினாய்? இராமன் பரம் பொருள் என்பது இதில் குறிப்பிடப் பெறுகிறது. உடுத்த திசை - உலகம்தன்னைச் சுற்றி ஆடையாக அணிந்த திக்குகள், யானை அழைத்த கதை: பாண்டிய மன்னன்இழைத்த பிழையால் அகத்தியர் அவனை யானையாகச் சபித்தார். அது நாளும் ஆயிரம் தாமரை மலரைக்கொண்டு திருமாலுக்குப் பூசை செய்து வந்தது. தேவலன் என்ற முனியிட்ட சாபத்தால்கந்தருவன் ஒருவன் முதலையாய்க் கிடந்தான். அக்குளத்தில் மலர் பறிக்க வந்த யானையை முதலைபற்றிடப் பல்லாண்டு காலம் அது வருந்தி இறுதியில் ‘ஆதிமூலமே’ என அழைக்க உடனே திருமால்கருடன் மேல் வந்து ஆழிப்படையால் முதலையைத் துணித்து யானையை முதலை வாயிலிருந்து விடுவித்தார்- யானை மோட்சமும் முதலை பொன்னுலகமும் சேர்ந்தன. 48 |