2565.புறம் காண அகம் காணப் பொது முகத்தின்
     அருள் நோக்கம்
இறங்காத தாமரைக் கண் எம்பெருமாஅன்!
     இயம்புதியால்;
அறம் காத்தற்கு, உனக்கு ஒருவர் ஆரும் ஒரு
     துணை இன்றி,
கறங்கு ஆகும் எனத் திரிய,
     நீயேயோ கடவாய்தான்?

    பொது முகத்தின் அருள்நோக்கம் இறங்காத தாமரைக்கண்
எம்பெருமாஅன் -
நடுநிலையில் நின்று அருட்பார்வை நீங்காத செந்தாமரை
போன்ற கண்ணுடைய எங்கள் பெருமானே!; புறம் காண அகம் காண -
ஒவ்வொரு பொருளின் உள்ளும் புறமும் கண்டு (வியாபித்து); அறம்
காத்தற்கு -
தருமத்தைப் பாதுகாத்தற்கு; உனக்கு ஒருவர் ஆரும்
ஒருதுணை இன்றி -
உனக்கு வேறு ஒருவர் எவரும் ஒரு சிறு துணையும்
செய்யாமல், கறங்கு ஆகும் எனத் திரிய - காற்றாடி போலச் சுற்றித்
திரிவதற்கு; நீயேயோ கடவாய்தான் - நீ தானோகடமைப்பட்டாய்,
இயம்புதி - எனக்குக் கூறுவாய். ஆல் - அசை.

     பரம்பொருள் எல்லாப் பொருள்களிலும் பரவிநின்று அறங்காத்து
அருள்புரிவதை இப்பாடல்விளக்கும். இறங்காத - முன் பின் தாழாத.
அறங்காக்கக் காற்றாடி போல் திரிந்த நிலையை முன்யானை காத்த
நிகழ்ச்சியில் காணலாம். துணையின்றி அறங்காப்பதால் ‘தருமத்தின் தனி
மூர்த்தி’ ஆவான் (2568). புறமாகிய ஊனக் கண்ணாலும் அகமாகிய ஞானக்
கண்ணாலும் காண - எனவும்உரைப்பர். எம்பெருமாஅன் - அண்மைவிளி
அளபெடுத்துவந்தது.                                          49