2566.துறப்பதே தொழிலாகத் தோன்றினோர்
     தோன்றியக்கால்
மறப்பரோ தம்மை அது அன்றாகில்,
     மற்று அவர் போல்
பிறப்பரோ? எவர்க்கும் தாம் பெற்ற பதம்
     பெறல் அரிதோ!
இறப்பதே, பிறப்பதே எனும் விளையாட்டு
     இனிது உகந்தோய்!

    இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய் -
இறத்தல் பிறத்தல் என்று கூறும் திருவிளையாட்டில் நன்கு மகிழ்ந்து
ஈடுபட்டவனே!; துறப்பதேதொழிலாகத் தோன்றினோர் தோன்றியக்கால்-
உலகப்பற்றை நீக்குதலையே தம் செயலாகக்கொண்ட ஞானியர் ஒரு கால்
பிறந்தால்; தம்மை மறப்பரோ - தம் இயல்பைமறப்பார்களோ
(மாட்டார்கள்); அது அன்றாகில் - அது அவ்வாறு அல்லாவிடில்; மற்று
அவர் போல் பிறப்பரோ -
அவர் பிறர் போல் பிறப்பு எடுப்பாரோ
(மாட்டார்); எவர்க்கும் தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ - அவ்வாறு
துறந்தவர்க்கும் அவர்கள் அடைந்தநற்பேறு பெறுதல் அரிதே ஆகும்.

     விளையாட்டு, மிகுந்த முயற்சி இல்லாமல் எளிதில் செய்வது - மாய
விளையாட்டு என்பார்பின்னரும் (2569). இறப்பதும் பிறப்பதும் செய்யும்
‘மானிட வடிவில் வந்து அவதாரம் செய்தனன்’என்பர் சிலர். பரமபதத்தை
அடைதல் துறவியர்க்கு மட்டுமின்றி இறைவன் பதம் அடைந்தவர்க்கும்எளிது
என்பதாம். இறப்பதே, பிறப்பதே-எண்ணுப் பொருளில் வந்தஏகாரங்கள்.  50