2567.பனி நின்ற பெரும் பிறவிக் கடல்
     கடக்கும் புணை பற்றி
நனி நின்ற சமயத்தோர் எல்லாரும்
     "நன்று" என்னத்
தனி நின்ற தத்துவத்தின் தகை
     மூர்த்தி நீ ஆகின்
இனி நின்ற முதல் தேவர் என் கொண்டு,
     என் செய்வாரோ?

    பனிநின்ற பெரும் பிறவிக் கடல் கடக்கும்புணை பற்றி - அச்சம்
தரும் பிறவியாகிய பெரிய கடலை நீந்திச் செல்லுதற்குத் தெப்பமாகக் கைக்
கொண்டு;நனிநின்ற சமயத்தோர் எல்லாரும் நன்று என்ன - மிகுதியாய்
நின்ற எல்லாச் சமயமக்களும் (தத்தம் கடவுளைப் பற்றுவது) நல்லதென்று
சொல்ல; தனிநின்ற தத்துவத்தின் தகைமூர்த்தி நீ ஆகின் - ஒப்பற்று
விளங்கும் மெய்ப்பொருளின் பெருங் கடவுளாகிய பரம்பொருள்நீயாக
இருக்கும் நிலையில்; இனி நின்ற முதல் தேவர் என் கொண்டு என்
செய்வாரோ -
இனிமேல் உறுதி கொள்ள நின்ற தலைமைத் தெய்வங்கள்
என்ன பெருமையைக் கொண்டு எதைச்செய்வார்கள்?

     இதில் இராமனே ஒப்பற்ற கடவுள். அவனே பிறவிப் பெருங்கடலை
நீந்தப் புணையாவான்.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் (குறள். 10) இங்கு
எண்ணுதற்குரியது. பிற சமயம் கூறும்தெய்வங்கட்கு இத்தகைய சிறப்பு
இல்லை என்பதாம். பனி நின்ற குளிர்ச்சி பொருந்திய (கடல்)எனவும் ஆம்.
காரண காரியத் தொடர்ச்சியாய் வருதலால் பிறவிக் கடல் என்றார். பிறவிக்
கடல் கடத்தல் - பிறவி அறுதல்.                                 51