2568. | ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி மாயாத வானவர்க்கும் மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும் நீ ஆதி முதல் தாதை, நெறி முறையால் ஈன்று எடுத்த தாய் ஆவார் யாவரே?-தருமத்தின் தனி மூர்த்தி! |
தருமத்தின் தனி மூர்த்தி - அறத்தின் ஒப்பற்ற வடிவான இராமனே!; ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி மாயாதவானவர்க்கும்- படைத்தல் தொழில் ஓய்வில்லாத தாமரை மலர் மேல் அமர்ந்த பிரமனே முதலாக உள்ள அழிவில்லாத தேவர்களுக்கும்; மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும் - அத்தேவரல்லாத உலகில் நிலைபெற்ற உயிர்களுக்கும்; நீ ஆதி முதல் தாதை - நீயே முதன்முதலில் தோன்றிய தந்தை ஆவாய்; நெறிமுறையால் ஈன்று எடுத்த தாய் ஆவார்யாவரோ? - நெறிப்படி பெற்றெடுத்த அன்னையாய் உள்ளவர் யார்? (நீயே எல்லாவற்றையும் பெற்றெடுத்த தாய் ஆவாய்) பிரமன் முதலிய தேவர்க்கும் உயிர்களுக்கும் தந்தை தாய் என்பவர் திருமாலே. தேவர்இறவாததற்கு அமுத முண்டமை காரணமாம். இனி, 'நின்தேவி யாம் திருமகளே தாய்' எனவும்கொள்ளலாம். கற்பங்கன் தோறும் பல பிரமர்கள் தோன்றுவதால் 'ஓயாத மலர் அயன்' எனவும்கூறுவர். திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றியவன் அயன். உடம்பு அழியினும் உயிர்அழியாததால் 'மன்னுயிர்' எனப்பட்டது. 52 |