2569.நீ ஆதி பரம்பரமும்;
     நின்னவே உலகங்கள்;
ஆயாத சமயமும் நின் அடியவே;
     அயல் இல்லை;
தீயாரின் ஒளித்தியால்; வெளி
     நின்றால் தீங்குஉண்டோ?
வீயாத பெரு மாய
     விளையாட்டும் வேண்டுமோ?

    ஆதி பரம்பரமும் நீ - முதன்மையான மேலாம் கடவுளும் நீயே;
உலகங்கள் நின்னவே - எல்லா உலகங்களும்உனக்குரியனவே; ஆயாத
சமயமும் நின் அடியவே-
ஆராய்ந்து அறிய முடியாத மதங்கள் உன்னைக்
காரணமாய்ப் பற்றியவையே, அயல் இல்லை - வேறு இல்லை (அவ்வாறு
இருக்கவும்) தீயாரின் ஒளித்தி - வஞ்சகர் போல் மறைந்துள்ளாய்; வெளி
நின்றால் தீங்குண்டோ-
யாவரும் அறிய வெளிப்படையாய்த் தோன்றினால்
தீமை உண்டாகுமோ?; வீயாத பெருமாயவிளையாட்டும் வேண்டுமோ? -
அழியாத பெரிய மாயையாக இத்திருவிளையாட்டும் செய்யவேண்டுமா?
ஆல் - அசை.

     பரம்பரம் - மேலானவற்றுள் மேலானது, உன்னை ஆராயாத
சமயங்களும் இறுதியாக அடைவது உன்திருவடியையே என்பதுமாம். தீயோர்
போல் நீ மறைந்திருக்க ஒரு காரணமும் இல்லை. எனவேஇம்மாயையாம்
விளையாட்டு எதற்கு என்பார். தீயாரின் என்பது பழிப்பது போலப்
புகழ்வதாம்.தீயவரின் கண்ணுக்குப் புலப்படாமல் நீ மறைந்துள்ளாய் என்பர்
சிலர். வீயாத பெருமாயஎன்பதற்கு அழியாத மாயனேஎன்பதுமாம்.      53