2570.தாய்தன்னை அறியாத கன்று
     இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாய்
     ஆகின், ஐய!
நீ அறிதி எப் பொருளும்; அவை உன்னை
     நிலை அறியா;
மாயை இது என்கொலோ?-
     வாராதே வரவல்லாய்!

    வாராதே வரவல்லாய் - (அடியார்க்கு) வருதற்கு 'அரியார் போலிருந்து
மிக எளியார்போல் வரும் வல்லமை உடையானே!; தாய் தன்னை அறியாத
கன்று இல்லை -
தன் தாயைத் தெரிந்து கொள்ளாத கன்று இல்லை; தன்
கன்றை ஆயும் அறியும் -
(அதுபோல்) தாயும் தன் கன்றை அறிந்து
கொள்ளும்; ஐய! -தலைவனே!; உலகின் தாய் ஆகின் எப்பொருளும் நீ
அறிதி -
எல்லா உலகங்களுக்கும்அன்னை ஆனதால் எல்லாப்
பொருள்களையும் நீ அறிகிறாய்; அவை உன்னை நிலை அறியா -
அப்பொருள்கள் உன் தன்மையை அறியாதுள்ளன; மாயை இது என்
கொலோ? -
இம்மாயச் சுழல்எதுவோ? (என்னால் அறிய முடியவில்லை).

     வாராதே வரவல்லாய் என்பதை வந்தாய் போல வாராதாய் வாராதாய்
போல் வருவானே' என்றபெரியார் திருவாய்மொழிப் பாசுரத்துடன் (60 : 9)
ஒப்பிடின் மேலும் தெளிவுகிட்டும். தாய்தன்னைக் கன்றறிவதை நாலடியாரும்
கூறும் (101). ஆயின் உயிர்களை நீ படைத்தாலும் அவை உன்னை
அறியவில்லை. நீயோ எல்லாம் அறிந்தவன்.                        54