2571. | "பன்னல் ஆம்" என்று உலகம் பலபலவும் நினையுமால்; உன் அலால் பெருந் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே; அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்மாட்டு அருந் தெய்வம் நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ? |
உலகம் - உலகமக்கள்; "பன்னல் ஆம்" என்று - துதிக்கலாம் என்று; பலபலவும் நினையும் - பல்வேறு தெய்வங்களை நினைப்பர்; (ஆனால்); உன் அலால் பெருந்தெய்வம் உயர்ந்துளோர்ஒழுக்கு அன்றே - உன்னைத் தவிர வேறு பெரிய கடவுள் உண்டெனக் கருதல் உயர்ந்த ஞானியரின்செயல் அன்று; அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர் மாட்டு - அன்ன வாகனமுடைய பிரமனைமுதலாகக் கொண்ட அந்தணர்களால்; அருந்தெய்வம் நின் அலால் இல்லாமை - வழிபடும் அரிய கடவுள் உன்னை அல்லாமல் வேறு இல்லா உண்மையை; நெறிநின்றார் நினையாரோ? - பலசமய நெறி நின்றவர்கள் எண்ணிப் பாராரோ? (பிறநெறியில் சென்று உண்மை அறியாது உள்ளனர்என்ற குறிப்பைப் புலப்படுத்தும்) பன்னுதல் - பல முறை கூறல். ஒழுக்கு - ஒழுக்கம். நடை, ஆசாரம், அந்தணர் - அழகியதட்பத்தை உடையவர், ஆல், ஏ - அசைகள் 55 |