2573.அரவு ஆகிச் சுமத்தியால், அயில்
     எயிற்றின் ஏந்துதியால்,
ஒரு வாயில் விழுங்குதியால், ஓர்
     அடியால் ஒளித்தியால்-
திரு ஆன நிலமகளை; இஃது
     அறிந்தால் சீறாளோ
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி
     மார்பில் வைகுவாள்?

    திரு ஆன நிலமகளை - அழகிய பூ தேவியை; அரவு ஆகிச்
சுமத்தியால் -
ஆதிசேடன் எனும் பாம்பாகித் தாங்கிநிற்கிறாய்; அயில்
எயிற்றின் ஏந்துதியால் -
(வராக அவதாரத்தில்) கூரிய உன்பல்லில்
தாங்கியுள்ளாய்; ஒரு வாயில் விழுங்குதியால் - (ஊழிக்காலத்தில்
அப்பூமியை)ஒரே வாயில் முழுதும் விழுங்குகின்றாய்; ஓர் அடியால்
ஒளித்தியால் -
திரிவிக்கிரமனாகி ஒரு திருவடிக்குள் மறைத்துள்ளாய்; மரு
ஆரும் துழாய் அலங்கல் மணிமார்பில் வைகுவாள் -
மணம் நிறைந்த
திருத்துழாய் மாலை உடைய நின் அழகிய மார்பில்தங்கியுள்ள திருமகள்;
இஃது அறிந்தால் சீறாளோ? -  இச் செய்திகளை அறிந்தால்உன்மேல்
ஊடல் (பெருங் கோபம்) கொள்ளமாட்டாளா? (கொள்வள்)

     திருமால் அரவானது புராணமரபு. 'நாகர்களிடை நான் அனந்தன்'
என்பது பகவத் கீதை (10 .29). மணிமார்பு - நீலமணி போல் ஒளிவீசும்
மார்பு எனலுமாம். தலைவன் பிற பெண்பால் சேரின்தலைவி சீறுவது
அகப்பொருளில் விரித்துரைக்கப் பெறும். சுமத்தியால், ஏந்துதியால்,
விழுங்குதியால், ஒளித்தியால் என நான்கு 'ஆல்'களும் அசைகள்.        57