2574.'மெய்யைத் தான் சிறிது உணர்ந்து, நீ
     விதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ? உனக்கு என்ன
     குறை உண்டோ?
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு
     அன்று அளித்த
ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும்
     உளர்; ஐயா!

    ஐயா! - தலைவனே!; நீ விதித்த மன்னுயிர்கள் - நீ படைத்த நிலை
பெற்ற உயிர்கள்; மெய்யைத்தான்சிறிது உணர்ந்து - நீயே பரம்பொருள்
என்ற உண்மையை ஒரளவு தெரிந்து; உய்யத் தான்ஆகாதோ - நற்கதி
அடைவது என்பது தான் முடியாதோ?; உனக்கு என்ன குறை உண்டோ -
(அவ்வாறு அவை உய்தி பெற்றால்) அதனால் உனக்கு எக்குறை ஏற்படும்?;
மழுவாளிக்கு அன்றளித்தஐயத்தால் - கோடரிப் படையைக் கொண்ட
சிவனுக்கு முன்னர் இட்ட பிச்சையால்; வையத்தார் வானத்தார் சிறிது
ஐயம் தவிர்ந்தாரும் உளர் -
மானிடரும் தேவரும்பரம்பொருள் யார்
என்று எண்ணிய சிறிது சந்தேகத்தையும் நீக்கினவர்களும் உண்டு.

     சிவன் பிரமனின் ஐந்தாம் தலையைக் கொய்ய அது அவன் கையில்
ஒட்டிக் கொள்ள அப்பிரமகபாலத்தில் திருமால் பிச்சையிடச் சிவன் அது
நீங்கி உய்ந்தான் என்பது புராணம். ஐயத்தால்ஐயம் நீங்கியது. தான் -
அசை.                                                     58