2575. | அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ; அவை உன்னை முன்னம் ஆர் ஓதுவித்தார்? எல்லாரும் முடிந்தாரோ? பின்னம் ஆய் ஒன்று ஆதல் பிரிந்தேயோ? பிரியாதோ? என்ன மாமாயம் இவை?-ஏனம் ஆய் மண் இடந்தாய்! |
ஏனம் ஆய் மண் இடந்தாய் - வராக மாய் நிலத்தைத் தன் கொம்பால் குத்தி எடுத்த திருமாலாம் இராமனே!; நீ அன்னமாய் அருமறைகள் அறைந்தாய் - நீ அன்னப் பறவையாகிப் பிரமனுக்கு அரிய வேதங்களை அருளினாய்;அவை முன்னம் உன்னை ஆர் ஓதுவித்தார் - அவ் வேதங்களை முன்னர் யார் உனக்குக்கற்பித்தார்?; எல்லாரும் முடிந்தாரோ? - அவர்கள் இறந்து விட்டார்களோ?; பின்னம் ஆய் ஒன்று ஆதல் பிரிந்தேயோ - பின்னப் பட்டு வேறாய் அமைந்தவை பின் ஒன்றாய் அமையும் என்பது ஒன்றிலிருந்து பிரிந்து வந்தவையோ?; பிரியாதோ - அல்லதுபிரியாது தனித்துள்ளவையோ?; என்ன மாமாயம் இவை? - இவ்வாறு உன் பெரிய மாயங்கள்இவையோ? (விளங்கவில்லையே). நீ சுய அறிவுடையவன் என்பது தோன்ற 'முன்னம் ஆர் ஓது வித்தார்?' என்ற கேள்வி உளது.உயிரும் கடவுளும் வேறுபட்ட நிலை என்ற கொள்கையை மறுத்துப் பின்னம் ஆய் ஒன்று ஆதல்பிரிந்தேயோ' என்ற தொடர் காட்டும். ஏனமாய் மண்ணிடந்த கதை: முன்னொரு காலத்தில் பூமியைப் பாய் போலச் சுருட்டிக் கடலில் ஒளித்த இரணியாக்கன் என்பவனைத் திருமால் வராகமாகஅவதரித்துக் கொன்று பூமியைத் தன் கொம்பால் எடுத்துக் கொண்டு வந்துவிரித்தருளினார். 59 |