2576.ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா!
     முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன்
     அருந்தவத்தால் அணுகுதலால்,
இப் பிறவிக் கடல் கடந்தேன்; இனிப்
     பிறவேன்; இரு வினையும்,
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால்,
     துடைத்தாய் நீ

    ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! - சிறிதும் ஒப்பு வேறு பெற
முடியாத பொருளே!;முன்உவந்து உறையும் - முன்னே மனம் விரும்பிப்
பள்ளி கொண்ட; அப்பு உறையுள் துறந்து- திருப்பாற்கடலாம்
இருப்பிடத்தை விட்டு நீங்கி; அடியேன் அருந்தவத்தால் - அடியவன்
முன் செய்த அரிய தவப்பேற்றால்; அணுகுதலால் இப்பிறவிக் கடல்
கடந்தேன் -
நீ எனக்குக் காட்சியளிக்க வந்ததால் என் இழிபிறப்பாம்
கடலை விட்டுப் பிழைத்தேன்; இனிப்; பிறவேன் - இனி மறுபடியும் பிறக்க
மாட்டேன்; இருவினையும் - என் நல்வினை தீவினைகள் எல்லாம்;
துப்புறழும் நீர்த்த - பவளம் போன்ற செந்நிறம் கொண்ட;சுடர்த்
திருவடியால் -
நெருப்பு போன்ற உன் திருவடியால்; நீ துடைத்தாய் - நீ
போக்கி அருளினாய்.

     இராமன் தன் திருவடிகளால் உதைத்துப் பள்ளத்தில் தள்ளிய பொழுது
'திருவடியால்துடைத்தாய்' எனப் போற்றுகிறான் விராதன். அப்பு - நீர்,
நீராலாகிய கடல், ஆகுபெயர்.                                   60