2578. | கள்ள மாய வாழ்வு எலாம் விள்ள, ஞானம் வீசு தாள் வள்ளல், வாழி! கேள்! எனா, உள்ளவாறு உணர்த்தினான் |
கள்ளமாய வாழ்வு எலாம் விள்ள - திருட்டும் வஞ்சகமும் உடைய என் இப்பிறவி வாழ்க்கையை எல்லாம் விண்டு போக; ஞானம் வீசுதாள் வள்ளல் வாழி! கேள் எனா - ஞானத்தை அருளும் திருவடி உடைய வள்ளல் இராமனே!வாழ்வாயாக! நீ கேட்டருள்க என்று; உள்ளவாறு உணர்த்தினான் - தன் வரலாற்றை உள்ளபடிகூறுவானாயினான். பொதுவாக வாழ்க்கையையே 'கள்ள மாயவாழ்வு' எனக் குறித்தான் எனலுமாம், வீசுதல்-போய்ப் பரவி வீழச் செய்தல். தன் சாபத்தைப் போக்கி அறியாமையை நீக்கி ஞானத்தைஅருளியதால் வள்ளல் என்றான். 62 |