2583. | தூண்ட நின்ற தொன்மைதான் வேண்ட நின்ற வேத நூல் பூண்ட நின் பொலம் கொள் தாள் தீண்ட இன்று தேறினேன் |
தூண்ட நின்ற தொன்மை தான் - தூண்டுவதற்காக (என்னுள்) அமைந்து நின்ற என் பழைய நல்வினைதான்; வேண்ட நின்ற வேத நூல்- விரும்ப நின் எதிரே வந்து நின்ற வேத நூல்கள்; பூண்ட நின் பொலம் கொள் தாள்தீண்ட - அணிந்துள்ள உன் அழகிய திருவடி என்னைத் தீண்ட; இன்று தேறினேன் - இப்போது என் சாபம் தீர்ந்து நல்லறிவுற்று உய்ந்தேன். நின்ற வேதம் - நிலை பெற்ற வேதமுமாம். பொலன் கொள் தாள் - பொற் கழலணிந்த திருவடிஎனவும் உரைப்பர். தன்னை ஓதி உணர்ந்தவர்க்கு நல்லறிவைத் தூண்டி நின்றும் பழமையாகத்தான்(மக்களால்) விரும்பி நின்றும் விளங்கும் வேதம் என முன்னடிகட்குப் பொருள் கூறுவர். 67 |