2586.கை கொள் கால வேலினார்
மெய் கொள் வேத மெய்யர் வாழ்
மொய் கொள் சோலை, முன்னினார்;
வைகலானும் வைகினான்

    கைகொள் காலவேலினார் - கையில் ஏந்திய யமன் போல் கொடிய
வேலையுடைய இராமலக்குவர்; மெய்கொள் வேத மெய்யர்வாழ் மொய்
கொள் சோலை முன்னினார் -
மெய்யாகிய வேதமே வடிவெடுத்த
தவமுனிவர்வாழ்கின்ற மரங்கள் அடர்ந்த சோலையை அடைந்தனர்;
வைகலானும் வைகினான் - நாளின்தலைவனாம் பகலவனும் மறைந்தான்.

     வைகல் - பகல், வைகலான் பகலவன் என்ற பொருளில் சூரியனைக்
குறித்தது. வேல் -படைகளின் பொதுப் பெயராய் வந்தது. பகைவர் உயிரைக்
கவர்வதால் வேல் யமனுக்கு ஒப்பாம்.வாழ்வோர் காலத்தை வரையறுப்பவன்
ஆதலால் காலன் எனப்பட்டான் யமன். வேத விதிப்படிகருமங்களைத்
தவறாது செய்பவர் ஆதலின் வேத மெய்யர் என்பர்.                 70