சரபங்கனுடைய குடில் அடைதல்

கலி விருத்தம்

2587.குரவம், குவி கோங்கு,
     அலர் கொம்பினொடும்
இரவு, அங்கண், உகும்
     பொழுது எய்தினரால்-
சரவங்கன் இருந்து
     தவம் கருதும்
மரவம் கிளர், கோங்கு
     ஒளிர், வாச வனம்

    குரவம் குவிகோங்கு அலர் - குரா மலரும் குவிந்த கோங்கு
அரும்புகளும் மலர்ந்த - கொம்பினொடும் - பூங் கொம்புபோன்ற
சீதையுடன்; சரவங்கன் இருந்து தவம் கருதும் - சரபங்க முனிவன்
தங்கியிருந்துதவத்தைச் செய்கின்ற; மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாச
வனம்-
மராமரத்திலிருந்துவளர்ந்தோங்கும் தேன் விளங்கு மணங்கொண்ட
வனத்தை; இரவு அங்கண் உகும் பொழுது எய்தினர் - இரவு நேரம்
அவ்விடத்தே சேரும்பொழுதில் அடைந்தனர், ஆல் - அசை.

     குரவமலரணிந்த, குவிந்த கோங்கு போன்ற முலைகளை உடைய சீதை
எனலுமாம். மரவம் என்பதுவெண்கடம்பு எனவும் குங்குமமரம் எனவும்
கொள்வர். சரவங்கன் - சரபங்கன் எதுகை நோக்கித்திரிந்தது. இரவு அங்கு
அணுகும் பொழுது எனவும் பிரிப்பர். குரவம் கோங்கு என்பன முதலாகு
பெயர்கள். கொம்பு - உவமவாகுபெயர். இது முதல் கலிவிருத்தம். மூச்சீரடி
வஞ்சி விருத்தமாகவும்கொள்வர்.                                 1