2588.செவ் வேலவர் சென்றனர்;
     சேறல் உறும்
அவ் வேலையின் எய்தினன்-
     ஆயிரமாம்,
தவ்வாது இரவும் பொலி
     தாமரையின்
வெவ்வேறு அலர், கண்ணினன்,
     விண்ணவர் கோன்.

    செவ்வேலவர் சென்றனர் - சிவந்த வேலினைக் கொண்ட
இராமலக்குவர் அவ்வழியே போயினர்; சேறல் உறும் அவ்வேலையின்-
சென்று அடையும் அப்பொழுதில்; தவ்வாது இரவும் பொலி தாமரையின்-
கூம்பாமல்இரவிலும் மலர்ந்துள்ள தாமரை மலர்கள் போல; வெவ்வேறு
அலர் ஆயிரமாம் கண்ணினன் -
தனித்தனியே மலர்ந்து விளங்கும்
ஆயிரம் கண்களை உடையவனாம்; விண்ணவர் கோன் எய்தினன்-
தேவர் தலைவனாம் இந்திரன் அங்கு வந்து சேர்ந்தான்.

     செவ்வேல் - சிறந்த வேலுமாம். வேல் என்பது போர்க் கருவிகளுக்குப்
பொது. வேலை -வேளை. இந்திரன் கண்கள் இமையாமல் இருப்பதால்
இரவும் பொலி தாமரை உவமையாயிற்று. இதுஇல்பொருளுவமை -
வெவ்வேறு அலர் கண் என்பது இந்திரனுக்குக் கௌதமமுனி் சாபத்தால்
உடலெங்கும்கண் பெற்றதைக் குறிக்கும். (472). தவ்வாது - தவறாமல்
என்றும்உரைப்பர்.                                             2