2590. வானில் பொலி தோகையர்
     கண்மலர் வண்
கானில் படர் கண்-களி
     வண்டொடு, தார்
மேனித் திரு நாரதன்
     வீணை இசைத்
தேனில் படியும் செவி
     வண்டு உடையான்

    வானில் பொலி தோகையர் - தேவர் உலகில் விளங்கும் மயில்
போன்ற தேவ மகளிரின்; கண்மலர் வண்கானில் - கண்களாம்
வளப்பமுடைய பூக்கள் பூத்த காட்டில்; படர் கண்களி வண்டொடு -
படர்ந்துசெல்லும் தன் கண்களாம் மயக்கமுற்ற வண்டுகளோடு; தார் மேனித்
திரு நாரதன் -
மாலைஅணிந்த திருமேனியும் திருவினையுமுடைய
நாரதமுனிவன்; வீணை இசைத் தேனில் - மகதி எனும்வீணையில் எழும்
இசையாகிய தேனிடத்து; படியும் செவி வண்டு உடையான் - தோயும்
செவிகளாம் வண்டுகளை உடையவனாம் இந்திரன்.

     வண்டுகள் மலர் வனத்தில் மொய்ப்பது போல் தெய்வ மகளிரைத் தன்
ஆயிரம் கண்களால்கண்டுகளித்தும், வண்டு தேன் பருகி இன்புறல் போல்
நாரத வீணை இசையினைக் கேட்டு மகிழ்ந்தும்இருந்தனன் இந்திரன் - இது
உருவக அணி. கண்வண்டோடு செவி வண்டும் உடையவனாம். நாரதர் எனின்
ஆன்ம ஞானம் அளிப்பவன், நரர்களுக்குள்ள ஒற்றுமையைப் பிளப்பவன்,
அன்பை அருள்பவன் என்றும்பொருள்.                             4