2591.அனையின் துறை ஐம்பதொடு
     ஐம்பதும், நூல்
வினையின் தொகை வேள்வி
     நிரப்பிய மா
முனைவன்; முது தேவரில்
     மூவர் அலார்
புனையும் முடி துன்று
     பொலங் கழலான்;

    அனையின் துறை நூல் வினையின் - வேள்வித் தீயிடத்து
சாத்திரங்களிற் கூறிய செயலின்படி; ஐம்பதொடு ஐம்பதும் தொகை
வேள்வி நிரப்பிய மா முனைவன் -
நூறு எனும் தொகை கொண்ட
அசுவமேத யாகங்களைச் செய்துமுடித்த பெருமை வாய்ந்த தலைவன்; முது
தேவரில் மூவர் அலார் -
பழமையான தேவர்களில்பிரமன், திருமால்,
சிவன் எனும் மூவர் அல்லாத மற்றைய தேவர்கள் யாவரும்; புனையும் முடி
துன்று பொலங்கழலான் -
தரித்துள்ள கிரீடங்கள் படிவதான பொன்னால்
அமைந்த வீரக் கழலைஅணிந்தவன் (இந்திரன்).

     நூறு யாகங்களை முடித்தவன் என்பதால் இந்திரனைச் சதமகன் என்பர்.
இந்திரன் மூவர்க்குஅடுத்தவன். அனை - அனல். எதுகை நோக்கித்
திரிந்தது துறை - ஏழாம் வேற்றுமைஉருபு.                          5