2592. | செம் மா மலராள் நிகர் தேவியொடும், மும் மா மத வெண் நிற முன் உயர்தாள் வெம் மா மிசையான்; விரி வெள்ளி விளங்கு அம் மா மலை அண்ணலையே அனையான்; |
செம்மா மலராள் நிகர் தேவியொடும் - சிவந்த பெரிய தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைப் போன்ற தன் மனைவியாம் சசியுடன்; மும்மா மத வெண்நிற முன் உயர் தாள் வெம்மா மிசையான் - மூன்று பெரியமதப்பெருக்குடையதும் வெள்ளை நிறமுடையதும் உயரமான முன்னங்கால்களை உடையதுமான அச்சமூட்டும்ஐராவதம் எனும் யானை மேல் வரும் இந்திரன்; விரி வெள்ளி விளங்கு அம்மா மலை அண்ணலையேஅனையான்- ஒளி பரந்த வெள்ளி போல் திகழும் அந்தப் பெரிய கைலை மலைமேல் (உமையுடன்விளங்கும்) சிவனை ஒத்திருப்பவன். மும்மதம் - கன்னமதம், கபோல மதம், பீசமதம் என்பன. இந்திரன் தன் மனைவியுடன் ஐராவதயானை மேலிருப்பதற்குச் சிவன் உமையுடன் கயிலை மேல் வீற்றிருப்பது உவமை. யானைக்கு மலையைஉவமிப்பது கவிமரபு. யானையின் முன்னங்கால்கள் பின்னங்கால்களை விட உயரமானவை. வெம்மா -மதம் பிடிப்பின் யானையின் உடல் வெப்பமாயிருத்தலைக் குறிக்கும். கொடுமையும் அழகும்ஆம். 6 |