2594.திசை கட்டிய மால் கரி
     தெட்ட மதப்
பசை கட்டின, கிட்டின
     பற்பல போர்
விசை கட்டழி தானவர் விட்டு
     அகல் பேர்
இசை கட்டிய ஒத்து
     இவர், சாமரையான்;

    திசை கட்டிய மால் கரி - எட்டுத்திக்குகளில் கட்டிய பெரிய எட்டு
யானைகளின்; தெட்ட மதப் பசை - தெளிவான மதநீர்ப்பசையோடு,
கட்டின - தொடர்புடையனவாக; கிட்டின பற்பல போர் - நெருங்கிய
பலபல போர்களில்; விசை கட்டழி தானவர்- வேகமும் உறுதியும் அழிந்து
தோற்றோடிய அசுரர்களினின்று; விட்டு அகல் பேர் இசை கட்டிய
ஒத்து -
நீங்கிஓடும்படியாகப் புகழை நிலை நாட்டியவை போல்; இவர்
சாமரையான் -
மேல் எழுந்துவிளங்கும் வெண் சாமரையை உடையவன்
(இந்திரன்).

     தெட்ட - முற்றிய என்றுமாம். எட்டுத்திசை யானைகளின் மதமாகிய
பசை உடலில் பட்டுக்கட்டிப் போகும்படி அசுரர்களுடன் கிட்டின போர்
எனலாம். இந்திரனுக்குத் தோற்றோடிய அசுரர்உடல் மீது திக்குயானைகளின்
மதநீர் பட்டு வெண்மையாய் உறைந்து போயிற்று. சாமரைகள்வெற்றித்
தூண்களுக்கு உவமிக்கப் பெற்றன. தானவர் - தனு என்பவளிடம் தோன்றிய
மரபினர்.                                                      8