2597.பல் ஆயிரம் மா மணி
     பாடம் உறும்
தொல் ஆர் அணி கால்
     சுடரின் தொகைதாம்
எல்லாம் உடன் ஆய்
     எழலால், ஒரு தன்
வில்லால், ஒளிர் மேகம்
     எனப் பொலிவான்;

    பல் ஆயிரம் மாமணி பாடம் உறும்- பல ஆயிரக்கணக்கான சிறந்த
மாணிக்கங்கள் ஒளிவீசும்; தொல் ஆர் அணி கால் சுடரின்தொகை -
பழமைச் சிறப்புற்ற நகைகள் வெளியிடும் ஒளியின் கூட்டம்; எல்லாம் உடன்
ஆய் எழலால் -
எல்லாம் ஒன்று சேர்ந்து மேலே கிளம்புதலால்; ஒரு தன்
வில்லால் -
இணையற்ற தன் இந்திரவில் எனும் வானவில்லால்; ஒளிர்
மேகம் எனப் பொலிவான் -
விளங்கும் கரு மேகம் போல விளங்குபன்
(இந்திரன்). தாம் - அசை.

     பாடம் - ஒளி, நகைகளின் சிறப்பைப் பழமை உணர்த்தும். இந்திரனுக்கு
மேகமும், அவன்பூண்ட நகைகளுக்கு இந்திர வில்லும் உவமை. இந்திரன்
நிறம் கருமை. பல நிற ஒளி மணிகள் பதித்தநகைகள் வானவில்லின்
பலநிறங்கள் கொண்டதற்கு ஏற்புடைத்து.                            11