2598.மானா உலகம் தனில்,
     மன்றல் பொரும்,
தேன் நாறு, நலம்
     செறி, தொங்கலினான்;
மீனோடு கடுத்து உயர்
     வென்றி அவாம்
வான் நாடியர் கண் எனும்
     வாள் உடையான்;

    உலகம் தனில் மானா - உலகத்தில் வேறு உவமை இல்லாத; மன்றல்
பொரும்தேன்நாறு நலம் செறி தொங்கலினான் -
தெய்வ மணம் வீசும்,
தேனின் சிறப்புமிக்க மாலைஉடையவன்; வான் நாடியர் மீனொடு கடுத்து
உயர்வென்றி அவாம் கண் எனும் -
தேவமகளிரின்மீன்களைப் பகைத்து
மேலான வெற்றியை விரும்பும் கண்கள் எனும்; வாள் உடையான் -
வாள்களைத் தன் படையாகக் கொண்டவன் (இந்திரன்)

     தேவமகளிர் கண்களுக்கு வாட்படை உவமை. அவர்கள் கண்களைக்
கொண்ட, யாகம் செய்துஇந்திர பதவியை அடைபவரை வெல்பவன்
இந்திரன். கடுத்து - ஒத்து எனலுமாம். தெய்வ மகளின் கண்எனும்
வாள்களைத் தன் மேல் பதியப் பெற்றவன் எனலுமாம். மானா உலகம்
என்பது பொன்னுலகத்தைக்குறிக்கும் என்பர் சிலர்.                  12