2599. | வெல்வான் நசையால், விசையால், விடு நாள், எல் வான் சுடர் மாலை இராவணன்மேல், நெல் வாலும் அறாத, நிறம் பிறழா, வல் வாய் மடியா, வயிரப் படையான்- |
எல்வான் சுடர் மாலை இராவணன் மேல் - ஒளி மிக்க சூரியனைப் போல் விளங்கும் மணி மாலைகள் அணிந்த இராவணன் மீது; வெல்வான் நசையால் விசையால் விடுநாள் - அவனை வெல்லும் ஆசையால் வலிவோடு எறிந்த பொழுது; நெல் வாலும் அறாத - நெல்லின் வால் நுனி போன்ற சிறு பகுதியும் அழிந்து போகாத; நிறம் பிறழா வல்வாய் மடியா - ஒளி மாறாத வலிய அதன் வாய்நுனி அழியாத; வயிரப்படையான் - வச்சிராயுதம் எனும் படைக்கலம் உடையவன் (இந்திரன்) நெல்வால் - நெல்லின் நுனியில் அமைந்த நுட்பமான கூரிய பகுதி. 'கதிர் வாலின்செந்நெல் உள (2688). இராவணனால் ஒரு சிறிதும் ஊறு படுத்த முடியாத வயிரப்படை. இது இருதலைச்சூலமாய் நடுவே பிடி அமைந்த படைக்கலன். இந்திரன் ததீசி முனியை வேண்டிய போது அவர் அளித்தஅவரது முதுகெலும்பால் ஆனது. ஆயின் காப்பிய எதிர்த் தலைவனாம் இராவணன் மேல் வெற்றி கொளஇந்திரன் எதிர்ந்த போது அவன் மீது சிறிதும் ஊறு விளைவிக்காமலும் தன்னொளி கெடாமலும்இருந்த படை என்ற குறிப்புப் பொருளும் கொள்ள இடமுண்டு. 13 |