இந்திரன் பிரம லோகத்திற்கு அழைத்தலும் முனி மறுத்தலும் 2601. | "நின்னால் இயல் நீதி நெடுந் தவம், இன்று, என்னானும் விளம்ப அரிது" என்று உணர்வான் அந் நான்முகன், நின்னை அழைத்தனனால்; பொன் ஆர் சடை மாதவ! போதுதியால்; |
பொன் ஆர் சடை மாதவ - பொன்னிறம் பொருந்திய சடையுடைய பெரும் தவத்தோனே; நின்னால் இயல் நீதி நெடுந்தவம் -உம்மால் செய்யப்பெற்ற முறை தவறாத பெருந்தவம்; என்னானும் விளம்ப அரிது என்றுஉணர்வான் - எவ்வகையாலும் எடுத்துக் கூறுவதற்கு அரியது என்று உணர்ந்தவனாகி; அந்நான்முகன் நின்னை அழைத்தனனால் - அந்த நான்கு முகமுடைய பிரமதேவன் உம்மைத் தம்உலகிற்கு வர அழைத்தனன் ஆதலின்; இன்று போதுதி - இப்பொழுது அங்குப்போகஎழுந்தருள்வீராக; ஆல் - அசை. என்னால் கூடக் கூற இயலாது என்ற கூற்றை இந்திரன் கூற்றாகவும் கொள்ளலாம். இந்திரன்ஐந்திரம் எனும் இலக்கணம் இயற்றிய அறிஞன். அத்தகையவனாலும் சரபங்கரின் தவப் பெருமை கூறுதற்கரியது என அவர் பெருமை உணரப்பெறும். 15 |