2602.'எந்தாய்! உலகு யாவையும்
     எவ் உயிரும்
தந்தான் உறையும்
     நெறி தந்தனனால்;
நந்தாத பெருந்தவ!
     நாடு அது நீ
வந்தாய் எனின், நின்
     எதிரே வருவான்;

    எந்தாய்! - எம் தந்தை போன்ற பெரியீர்!; உலகு யாவையும் எவ்
உயிரும் தந்தான்  உறையும் நெறிதந்தனன் -
உலகங்கள்
எல்லாவற்றையும் அவற்றில் வாழும் எல்லா உயிரினங்களையும்
படைத்தவனாம் பிரமதேவன் வாழும் சத்தியலோகத்தில் வீற்றிருக்கும் பேற்றை
உமக்கு அருளினான்,அது நந்தாத பெருந்தவ நாடு - அந்த உலகம்
அழியாத பெருந் தவத்தால் அடையத்தக்கதாகும்;நீ வந்தாய் எனின் - நீர்
அங்கு வருவீர் என்றால்; நின் எதிரே வருவான் - அப்பிரம தேவன் உம்
எதிர் வந்து அழைத்துச் செல்வான்; ஆல் - அசை.

     நெறி - இடம், நந்தாத பெருந்தவ என்ற தொடரை சரபங்க முனிக்கே
விளியாக்கிக் கெடாதபெருந் தவத்தை உடையோய் எனக் கூறலுமாம்.
எந்தாய் என்பது இடவழுவமைதி, வந்தாய் என்பது காலவழுவமைதி.     16