2603. | 'எல்லா உலகிற்கும் உயர்ந் தமை, யான் சொல்லாவகை, நீ உணர் தொன்மையையால்: நல்லாளுடனே நட, நீ' எனலும், 'அல்லேன்' என, வால் அறிவான் அறைவான்: |
எல்லா உலகிற்கும் உயர்ந்தமை - அச்சத்திய லோகம் மற்றெல்லா உலகங்களுக்கும் சிறந்தது என்பதை; யான் சொல்லாவகை - நான் கூறாதபடி; நீ உணர் தொன்மையை - நீர் முன்னமே அறியும் பழமையுடையவராவீர்;(ஆதலின் உமக்கு நான் சொல்ல வேண்டுவதில்லை) ; நல்லாள் உடனே நட நீ எனலும் - உம்மனைவியுடன் வந்தருள்வீர் நீர் என்று இந்திரன் கூறவும்; வால்அறிவான் அல்லேன் எனஅறைவான் - சிறந்த அறிஞனாகிய சரபங்கர் அதற்கு இசையேன் என்று சொல்வார்; ஆல் -அசை. 'நீ உணர் தொன்மையை' என இந்திரன் சரபங்கரிடம் கூறியதால் இந்திரனும் அறியாத மிகப்பழங்காலத் தவசி அவர் என்பது தெரிகிறது. வாலறிவான் என்ற தொடர் குறளில் (2) காணும்'வாலறிவன்' என்பதுடன் ஒப்பிடற்குரியது. நல்லாள் என்பது முனிவரின் மனைவி என்பதைப் பின் வருபாடலாலும் (2628) அறியலாம். 17 |