2605. 'சொற்றும் தரம் அன்று இது;
     சூழ் கழலாய்!
பெற்றும், பெறு கில்லது
     ஓர் பெற்றியதே;
மற்று என் பல? நீ
     இவண் வந்ததனால்,
முற்றும் பகல் தானும்
     முடிந்து ளதால்;

    சூழ்கழலாய்- கட்டிய வீரக்கழல் அணிந்தவனே!; இது சொற்றும் தரம்
அன்று -
நீ சொல்லும் இதுபேசத்தக்கது அன்று; (ஏனெனில் அப்பேறு)
பெற்றும் பெறுகில்லது ஓர் பெற்றியதே - அடைந்தாலும் அடைந்ததாகக்
கருதப்படாத ஒரு தன்மையதாகும்; மற்று என்பல - வேறு பல சொல்
கூறுவது எதற்கு?; நீஇவண் வந்ததனால் - நீ இங்கு வந்ததால்; பகல்
தானும் முற்றும் முடிந்துளது -
என்வாழ்வுக் காலம் முழுதும்
முடிந்ததாகும்; ஆல் - அசை.

     பிரமலோகப் பதவியைச் சரபங்கர் அற்பமாகக் கருதியதையும் இந்திரன்
வந்ததால் தம்வாழ்வுக் காலம் முடிவுறுவதையும் அவர் உணர்ந்த நிலை
புலப்படுகிறது. சிறந்த தவம் புரிந்தோர்தவமுடிவைத் தேவர் முதலோர் வந்து
தெரிவிப்பதை இக்காண்டப் பாடலில் (3705) வீட்டினுக்குஅமைவதான மெய்ந்
நெறி வெளியிற்றாகக் காட்டுறும் அறிஞர்' என்ற தொடர் கூறும். பகல்
என்பது நேரத்தின் பொதுப் பெயராய் இங்கு வாழ்நாளைக் குறிக்கிறது.    19