2606. | 'சிறு காலை இலா, நிலையோ திரியா, குறுகா, நெடுகா, குணம் வேறுபடா, உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும் மறுகா, நெறி எய்துவென்;- வான் உடையாய்!' |
வான் உடையாய் - சுவர்க்க நாட்டை உடைய இந்திரனே!; சிறு காலை இலா - சிறிய பொழுது இல்லாததும்; நிலையோ திரியா - இடம் விட்டுப் பெயராததும்; குறுகா - காலத்தால் குறுகிப்போகாததும்; நெடுகா - அக்காலத்தில் பெருகி நீளாததும்; குணம் வேறுபடா - தன்மையில் மாறுபடாததும்; உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும் - பொருந்திய காற்றுமுதலாக விளங்கும் ஐம்பூதங்கள் எல்லாம் விழுந்து அழிந்தாலும்; மறுகா நெறி எய்து வென் -அழியாத முத்தி நெறியை அடைவேன் (என்றான்). மறுகா நெறி - மாறாத முத்தி நெறி என்பது மற்ற பதவிகளை விட மேலானது. மற்றவை உருவாலும்காலத்தாலும் தன்மையாலும் பல மாறுபாடுகள் அடையும். இதுவோ அத்தகைய மாறுபாடு அடையாது. இதனைச் சடாயு 'பூதங்கள் விளியும் நாளும் போக்கிலா உலகம் புக்க' (3530) நிலையுடன் ஒப்பிடத்தக்கது.இதில் சரபங்கரின் உறதிப்பாடு புலனாகிறது. 20 |