இந்திரன் வந்திருத்தலை இராமன் உய்த்து உணர்தல்

2607.என்று, இன்ன விளம்பிடும்
     எல்லையின் வாய்,
வன் திண் சிலை வீரரும்
     வந்து அணுகா,
ஒன்றும் கிளர் ஓதை
     யினால் உணர்வார்,
நின்று, 'என்னைகொல் இன்னது?'
     எனா நினைவார்:

    என்று இன்ன விளம்பிடும் எல்லையின் வாய் - என்று இப்படிச்
சரபங்கர் கூறிய போது; வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா -
வலிமையும் திண்மையும் உடைய வில்லேந்திய வீரர்களாம் இராமலக்குவர்
அங்கு வந்தடைந்து; ஒன்றும் கிளர் ஓதையினால் உணர்வார் -
அவ்விடத்துப் பொருந்திய, மேலெழும்ஆரவாரத்தினால் காரணத்தை
அறிந்தவராய்; நின்று - அவ்விடத்தே நின்று; என்னைகொல் இன்னது
எனா நினைவார் -
என்னவோ இங்கு நிகழும் செயல் என்று கருதினார்.

     கிளர் ஓசை - இந்திரனுடன் வந்த யானை முதலியவற்றால் எழுந்த
ஓசை. வன் திண் - ஒருபொருட் பன்மொழி கொல் - ஐயப் பொருள் தரும்
இடைச் சொல் அணுகா. செய்யா எனும் வாய்பாட்டுஉடன்பாட்டு
வினையெச்சம்.                                                 21