2608. | கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிரக் கம்பக் கரி நின்றது கண்டனமால்; இம்பர், தலை மா தவர்பால், இவண் ஆம் உம்பர்க்கு அரசு எய்தினன்' என்று உணரா, |
நால் ஒத்தன ஒளிர் கோள் வயிரக் கொம்பு -நான்கு ஒன்றுக்கொன்று ஒத்து விளங்கும் ஒளி பொருந்திய வலிய வயிரம் போன்ற கொம்புகளை உடைய; கம்பக்கரி நின்றது கண்டன மால் - அசைந்தாடும் ஐராவத யானை நின்றுள்ளதைப்பார்த்தோம் ஆதலின்; இம்பர்தலை - இவ்வுலகில்; மாதவர்பால் - பெருந்தவம்செய்த சரபங்கரிடத்து; இவண் உம்பர்க்கு அரசு எய்தினன் ஆம் - இங்கேதேவர்க்கரசனாம் இந்திரன் அடைந்தான்; என்று உணரா - என அறிந்து, கம்பக் கரி என்பதற்குக் கம்பத்தில் கட்டப்படும் யானை என்றும். கண்டோர்க்குஅச்சத்தை உண்டாக்கும் யானை என்றும் உரைப்பர். இம்பர்த் தலை மாதவர் என்பதை சரபங்கர்கூற்றிலேயே 'என் அரும்தவமோ கற்பம் பல சென்றது' (2604) என வருதல் காணலாம் ஐராவத யானைநான்கு கொம்புகளை உடையது. எனவே கொம்பு ஒத்தன நால் என்றார். வயிரம் என்பதைக் கிம்புரிஎன்பர் சிலர். வயிரக் கம்பம் எனத் திண்ணிய கட்டுத்தறி எனவும் ஆம். உணரா - செய்யா எனும்வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம். 22 |