2609. | மானே அனையாளொடு மைந்தனை அப் பூ நேர் பொழிலின் புறமே நிறுவா, ஆன்ஏறு என, ஆள் அரி ஏறு இது என, தானே அவ் அகன் பொழில் சாருதலும், |
மானே அனையாளொடு மைந்தனை - மான் போன்ற சீதையோடு இளையவனாம் இலக்குவனையும்; அப் பூநேர் பொழிலின் புறமே நிறுவா- அந்தப் பூக்கள் நிறைந்த சோலையில் வெளியே இருக்கச் செய்து; ஆன் ஏறு என - காளை போலவும்; ஆள் அரிஏறு என - வலிய ஆண் சிங்கம் ஒப்பவன் எனவும்; தானே அவ்அகன் பொழில் சாருதலும் - தான் மட்டும் அந்த அகன்ற (சரபங்கரின்) தவச் சாலையைஅடைதலும்; இது - அசை. மைந்து- இளமை, மைந்தன் - இளையவனாம் இலக்குவனைக் குறித்தது. இராமனை இலக்குவன் தந்தைஎனக் கொள்வதால் இவ்வாறு கூறலுமாம். மைந்தன் - வலிமை உடையவன் எனவும் கூறுவர். இராமன்நடைக்குக் காளையும் ஆண் சிங்கமும் உவமையாக 'மாகமடங்கலும் மால்விடையும்... நாண நடந்தான்'என வருவதைக் காணலாம் (697). ஆள் - மற்ற விலங்குகளை அடக்கி ஆள்கின்ற எனவும் ஆம். நிறுவா- நிறுவி உடன்பாட்டு வினையெச்சம். 23 |