இந்திரன் இராமனைக் கண்டு துதித்தல் 2610. | கண்தாம் அவை ஆயிரமும் கதுவ, கண் தாமரைபோல் கரு ஞாயிறு எனக் கண்டான், இமையோர் இறை-காசினியின்- கண்தான், அரு நான் மறையின் கனியை. |
இமையோர் இறை - தேவர்க்கரசனாம் இந்திரன்; காசினியின்கண் - பூமியின் மேல்; அருநான் மறையின்கனியை- அரிய நான்கு வேதங்களின் இனிய பழமாம் இராமனை; கண் தாமரை போல் கருஞாயிறு என - கண்கள் தாமரை இதழ் போலும் நிறம் கரிய சூரியனே போலும் என்று; கண்தாம் அவை ஆயிரமும் கதுவ(க்)கண்டான் - தன் ஆயிரம் கண்களுமே (இராமன் உருவில்)பொருந்தி ஊன்றப் பார்த்தான்; தான் - அசை. இராமன் ஞாயிறு போல் ஒளியும் கரிய நிறமும் கொண்டவனாதலின் கரு ஞாயிறு எனஉருவகிக்கப்பட்டான். 'கரு ஞாயிறு போல்வர்' என முன்னரும் கண்டோம் (1163) நான்மறையின்கனி என்ற பொருள் விளங்க 'வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை' எனப் பெரிய திருமொழியும் கூறும் (2-3: 2). இப்பாடலில் கருஞாயிறு என இல்பொருள் சுட்டப் பெறுகிறது. 24 |