எண்சீர் ஆசிரிய விருத்தம் 2612. | துவசம் ஆர் தொல் அமருள், துன்னாரைச் செற்றும், சுருதிப் பெருங் கடலின் சொல் பொருள் கற்பித்தும், திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியில் உய்த்தும், திரு அளித்தும்,வீடு அளித்தும், சிங்காமைத் தங்கள் கவசம் ஆய், ஆர் உயிர் ஆய், கண் ஆய், மெய்த் தவம் ஆய், கடை இலா ஞானம் ஆய், காப்பானைக் காணா, அவசம் ஆய், சிந்தை அழிந்து, அயலே நின்றான், அறியாதான் போல, அறிந்த எலாம் சொல்வான்: |
துவசம் ஆர் தொல்லமருள் துன்னாரைச் செற்றும் - கொடிகள் நிறைந்த பழைய போர்களில் பகைவர்களை அழித்தும்; சுருதிப் பெருங் கடலின்சொல்பொருள் கற்பித்தும் - வேதமாகிய பெரிய கடல்களின் எல்லையற்ற சொற்களையும்அவற்றின் பொருள்களையும் உபதேசித்தும்; திவசம் ஆர் நல் அறத்தின் செந் நெறியில்உய்த்தும் - நாள்தோறும் பொருந்திய நல்ல தருமங்களின் சிறந்த வழியில் கொண்டுசெலுத்தியும்; திரு அளித்தும் - செல்வத்தைக் கொடுத்தும்; வீடு அளித்தும் - பரம பதத்தைக் கொடுத்தும்; சிங்காமைத் தங்கள் கவசம் ஆய் - அழியாதவாறு (தேவாரம்) தங்களுக்குக் கவசம் ஆகியும்; ஆர் உயிர் ஆய் - அருமை உயிர் ஆகியும்; கண் ஆய் -கண் ஆகியும்; மெய்த்தவம் ஆய் - உண்மைத் தவம் ஆகியும்; கடையிலா ஞானம்ஆய் - முடிவற்ற மெய்ஞ்ஞானம் ஆகியும், காப்பானைக் காணா - காத்து வரும்பரம்பொருளாம் இராமனைக் கண்டு; அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் - தன்னிலை மறந்து (அவன்) பக்கத்தில் நின்றவனாகி; அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் - (இராமனின் பெருமைகளைத்) தெரியாதவன் போல தான் அறிந்த பெருமைகளைஎல்லாம் தெரிந்தவாறு கூறித் துதிப்பான் (இந்திரன்). தொல்லமர் - பழங்காலத்தில் தேவர்க்கும் அசுரர்க்கும் நடந்த போர். சுருதிப் பொருள் கற்பித்த செயல் முன்னர் அன்னமாய்ப் பிரமனுக்கு உபதேசித்ததாகும். கடல் போல் வேதம் எல்லைஅற்றது எனவே கடலாக உருவகிக்கப்பட்டது. சிங்குதல் - குறைதல், சுருங்குதல், அழிதல். கவசம் - பகைவரால் ஊறு நேராதவாறு அணியும் மெய்யுறை. பிரளய காலத்தில் அனைத்துப் பொருள்களையும்தன்னுள் அழியாமல் காப்பதால் கவசமாயிற்று, வெளியே கவசமாயும் உள்ளே உயிராயும் உள்ளும்புறமும் காப்பவன் ஆயினான். அயோத்தியா காண்டக் கடவுள் வாழ்த்தில் 'ஊனும் உயிரும் உணர்வும்போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப' (1313) எனக் கூறப்பட்டது. பக்தி மிகுதியால் சிந்தைஅழிந்த நிலையை இந்திரன் அடைந்தான்; எனவே அறியாதவன் போல அறிந்த எலாம்கூறினான். 26 |