2613.தோய்ந்தும், பொருள் அனைத்தும்
     தோயாது நின்ற
சுடரே! தொடக்கு அறுத்தோர்
     சுற்றமே! பற்றி
நீந்த அரிய நெடுங்
     கருணைக்கு எல்லாம்
நிலயமே! வேதம் நெறி
     முறையின் நேடி
ஆய்ந்த உணர்வின் உணர்வே!
     பகையால்
அலைப்புண்டு அடியேம் அடி
     போற்ற, அந் நாள்
ஈந்த வரம் உதவ
     எய்தினையே? எந்தாய்!
இரு நிலத்தவோ, நின்
     இணை அடித் தாமரைதாம்?

    பொருள் அனைத்தும் தோய்ந்தும் தோயாது நின்ற சுடரே -
எல்லாப் பொருள்களிலும் கலந்தும் கலவாமலும் தனித்து நின்ற ஒளியே!;
தொடக்கு அறுத்தோர்சுற்றமே - பற்றுகளை முற்றும் அறுத்து விலக்கிய
முனிவர்க்கு உறவானவனே!; பற்றி நீந்தஅரிய நெடுங் கருணைக்கு
எல்லாம் நிலயமே -
புணையாகக் கொண்டு கடப்பதற்கு அரிதான நீண்ட
எல்லா அருளுக்கும் இருப்பிடமானவனே!; வேதம் நெறி முறையின் நேடி
ஆய்ந்த உணர்வின் உணர்வே-
வேதங்கள் கூறிய நன்னெறி முறைப்படி
ஆய்ந்த உணர்ச்சியால் உணரப்பெறும் பொருளே!; எந்தாய் - எங்கள்
தந்தையே!; அடியேம் - அடியவர்களாகிய நாங்கள்; பகையால்
அலைப்புண்டு -
பகைவர்களால் துன்பப்படுத்தப்பட்டு; அடிபோற்ற
அந்நாள் ஈந்த வரம் உதவஎய்தினையே -
உம் திருவடிகளைத் துதிக்க
அப்பொழுது கொடுத்த வரத்தின்படி எங்களுக்கு உதவிபுரிய
எழுந்தருளினையே?; நின் இணை அடித்தாமரை இரு நிலத்தவோ -
உனது இரண்டு திருவடித்தாமரைகள் இப்பெரிய பூமியில் படத்தக்கனவோ?;
தாம் - அசை.

     தோய்ந்தும் தோயாது நிற்றல் - எல்லாப் பொருள்களின் கண்ணே
கலந்திருந்தும் அவற்றில்பற்றின்றித் தனித்தும் நிற்றல். அந்நாள்- தேவர்கள்
தாங்கள் அரக்கரால் பட்டதுன்பங்களைக் கூறித் திருமாலைச் சரணடைந்த
அந்த நாள். பரம்பொருள் கால் நிலம் தோயாதுநிற்றற்குரியது. தேவர்
விருப்பப்படி மண்ணில் அவதரித்து கால் நிலம் பட வந்த நிலையை எண்ணி
வருந்திக் கூறியது இது. பிரமன் முதலிய மற்றைத் தேவர்களையும்
உளப்படுத்தி அடியேம் என்றான்இந்திரன். சுடர், சுற்றம், நிலயம், உணர்வு,
தாமரை என்பன உருவகம். பகை - பண்பாகுபெயர்.                 27