2615.நாழி, நவை தீர் உலகு
     எலாம் ஆக,
  நளினத்து நீ தந்த
     நான்முகனார்தாமே
ஊழி பலபலவும் நின்று
     அளந்தால், என்றும்
  உலவாப் பெருங் குணத்து எம்
     உத்தமனே! மேல்நாள்,
தாழி தரை ஆக, தண் தயிர்
     நீர் ஆக,
  தட வரையே மத்து ஆக, தாமரைக்
     கை நோவ
ஆழி கடைந்து, அமுதம்
     எங்களுக்கே ஈந்தாய்;
  அவுணர்கள்தாம் நின் அடிமை
     அல்லாமை உண்டோ?

    நீ நளினத்துத் தந்த நான்முகனார் தாமே - நீ உன் திரு உந்தித்
தாமரையில் தோற்றுவித்த நான்கு முகங்களையுடைய பிரமதேவரே; நவைதீர்
உலகு எலாம் நாழி ஆக -
குற்றமற்ற உலகங்கள் யாவும்
அளக்கும்படியாகக் கொண்டு; ஊழிபலபலவும் நின்று அளந்தால் -
அனேக ஊழிக்காலங்களும் விடாமல் அளந்தாலும்; என்றும்உலவாப்
பெருங் குணத்து எம் உத்தமனே -
என்றைக்கும் குறையாத அரும் பெரும்
பண்புகளுடையமேலானவனே!; மேல்நாள் - முற்காலத்தில்; தரை தாழி
ஆக -
பூமியேதாழியாகவும்; நீர் தண் தயிர் ஆக - கடல் நீரே குளிர்ந்த
தயிராகவும்; தடவரையேமத்து ஆக - பெரிய மந்தர மலையே கடையும்
மத்தாகவும்; தாமரைக்கை நோவ - தாமரைமலர் போன்ற உன் கைகள்
வருந்த; ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் - கடலைக்
கடந்து அதனின்று வந்த அமுதத்தைத் தேவர்களாம் எங்களுக்கே
கொடுத்தருளினாய்; அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை
உண்டோ -
(எங்களோடு ஒரு பக்கம் கடைந்த) அசுரர்கள் தாம்உனக்கு
அடிமை அல்லாமை உளதோ?

     உன் மகனாம் பிரமனாலும் அளந்தறிய முடியாத எல்லையற்ற கலியாண
குணங்கள் எங்களால்சிறிதும் அறியத்தக்கவையோ எனக் கருதியதாம்.
அறங்காத்து மறங்கடியும் பண்பினால் தேவர்க்குஅமுதமீந்து அரக்கர்க்கு
அதனை மறுத்தான். இறைவன் பண்புகளை அளக்கும் பொருளாகக் கொண்டு
பலஅண்டங்களை அளக்கும் கருவியாகக் கொண்டு அளந்தாலும் அளவிட
முடியாது என்பது ஏகதேச உருவகம். தரைதாழியாகவும், நீர் தயிராகவும்,
வரை மத்தாகவும் உருவகம் செய்யப்பட்டன. இது உருவக அணி.

     பாற்கடலைக் கடையும்போது அசுரர்களை வாசுகியின் தலையையும்
தேவர்களை அதன் வாலையும்பிடித்துப் பாற்கடலில் நட்ட மந்தர மலையை
மத்தாகக் கொண்டு நிற்குமாறு ஏவித் தானும் ஒருதிருமேனி பூண்டு
வாசுகியின் வாலையும் தலையையும் பிடித்து வலம் இடமாகக் கடைந்ததாகப்
புராண வரலாறு கூறும்.                                        29