2616. | 'ஒன்று ஆகி, மூலத்து உருவம் பல ஆகி, உணர்வும் உயிரும் பிறிது ஆகி, ஊழி சென்று ஆசறும் காலத்து அந் நிலையது ஆகி, திறத்து உலகம்தான் ஆகி, செஞ்செவே நின்ற நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே! எங்கள் நவை தீர்க்கும் நாயகமே! நல் வினையே நோக்கி நின்றாரைக் காத்தி; அயலாரைக் காய்தி; நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே! |
மூலத்து ஒன்று ஆகி - ஆதியில் ஒரே பொருளாகி இருந்தும்; உருவம் பல ஆகி - பின் அந்த ஒன்றிலிருந்து பல வடிவங்களாகப் பிரிந்தும்; உணர்வும் உயிரும் பிறிதாகி - அறிவும் உயிரும் உடலும் ஆகி; ஊழி சென்று ஆசறும் காலத்து - ஊழிக்காலம் கடந்து உலகம்முடியும் காலத்து; அந்நிலையது ஆகி - அப்பொழுதுள்ள தன்மையது ஆகி; திறத்து உலகம்தான் ஆகி - பல திறப்பட்ட உலகங்களுமாய்; செஞ் செவே நின்ற நன்று ஆய ஞானத் தனிக்கொழுந்தே - மிகச் செம்மையாய் நின்ற மேலான ஞானத்தின் ஒப்பில்லாத கொழுந்து போன்றவனே!; எங்கள் நவை தீர்க்கும் நாயகமே - எம் போன்றவர்களின் குறைகளைப்போக்கும் தலைமைப் பொருளே!; நல்வினையே நோக்கி நின்றாரைக் காத்தி - நல்லசெயல்களையே கருதுவோரைக் காப்பாற்றுகின்றாய்; அயலாரைக் காய்தி - பாவச் செயலைக்கருதுவோரை அழிக்கின்றாய்; நிலை இல்லாத் தீவினையும் - எப்போதும் நிலையற்ற பாவச்செயல்களும்; நீ தந்தது அன்றே - நீ படைத்தவை அன்றோ? முதலில் எல்லாம் கலந்த ஒரு பொருளாய் இருந்த பரம் பொருள் உலகப் படைப்பிற்காகப் பலபொருளாய் விரியும், ஊழிக்காலத்தில் யாவும் அழிய முன்னிருந்த ஒன்றாக விளங்கும். இதனால்படைத்தல் காத்தல் அழித்தல் என்பன மாறி வருவன என்றும், நல்வினை தீவினை என்பன இறைவனால்படைக்கப்பட்டவை என்றும் புலப்படும். ஆசறுதல் - முடிதல் நிலை இல்லாத் தீவினை - தோன்றும்பொருள்கள் யாவும் நிலையின்றி அழிவன என அறியாமையால் உளவாகும் தீவினைகள். செஞ்செவே - குறிப்புச் சொல். கொழுந்து, நாயகம் என்பன உருவகம். 30 |